Thursday, November 12, 2009

சிறிது வெளிச்சம்! - எஸ்.ராமகிருஷ்ணன்

சிறிது வெளிச்சம்!
புல்லின் நிழலில் இளைப்பாறுங்கள்

500 ரூபாய்க்கு ஒரு காசோலையும் அத்துடன் ஒரு கடிதமும் இணைந்த தபால் ஒன்று என் முகவரிக்கு வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் பரிச்சயமானதாக இல்லை.

'அன்புடைய ராமகிருஷ்ணன், என் மகளின் இதயச் சிகிச்சைக்குப் பண உதவி தேவை என்றுநாளி தழில் வெளியான விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் அனுப்பிய உதவிக்கு நன்றி. கடந்தவெள்ளிக் கிழமை என் மகள் அறுவை சிகிச்சைக்கு முன்பா கவே இறந்துவிட்டாள். ஆகவே, அவளுக்காக உங்களைப்போல பலரும் அனுப்பிய பணம் அவசியம் அற்றுப் போய்விட்டது. இனி, அப்பணம் எங்களுக்குத் தேவை இல்லை.

என் மகள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட பணம் முழுவதையும் அதை அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பி வருகிறேன். என்னைப்போல உதவி வேண்டும் இன்னொரு நபருக்கு அந்தப் பணம் பயன்படக்கூடும் என்ற நல்லெண்ணம்தான் இதற் கான காரணம். இதை நீங்கள் தவறாக எண்ணவேண் டாம். முகம் தெரியாத மனிதருக்குச் செய்யும் உதவி, கடவுளுக்குச் செய்யும் அரும்பணி. அதற்காக என் குடும்பம் உங்களுக்கு என்றும் நன்றியுடையது. இப்படிக்கு செல்வ விநாயகம்' என்றிருந்தது.

அந்தச் செய்தி ஒரு பக்கம் என்னைத் துக்கம் அடையச் செய்தது. இன்னொரு பக்கம் இவ்வளவு உயர்வான மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்களா என்று வியப்படையவும் வைத்தது. எவ்வளவு உன்னதமான நேர்மை.


தன் பெண் இறந்துவிட்டாள். அதற்குப் பிறகு இந்தப் பணம் தங்களுக்கு எதற்கு? அதை உரியவர்களுக்குத் திருப்பி அனுப்புவதன் வழியே அது யாரோ ஒருவருக்குப்பயன்படும் என்று எண்ணுவது எத்தனை உயரிய சிந்தனை.

உதவி என்று பணம் அனுப்பியவர்களில் எவரும் கணக்கு கேட்கப்போவது இல்லை. எப்படிப் பணம் செலவழிக்கப்பட்டது என்று கண்காணிக்கப்போவதும் இல்லை. ஆனால், வறுமையான சூழலுக்குள்ளும் அந்தப் பணம் தங்களுக்குத் தேவையற்றது என்று திருப்பித்தரும் மனதுகொண்ட அந்த மனிதர் மிக உயர்வானவராகத் தோன்றினார்.

அன்று இரவு எல்லாம் அதைப்பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். எங்களிடம் மீதமாக உள்ள பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுக்க முன்வருகிறோம் என்று யாராவது எங்காவது சொல்லியோ, நடந்தோ கேள்விப்பட்டு இருக்கிறேனா? நினைவில் இல்லை. பொதுமக்களுக்கு உரிய பணம் கோடிக்கணக்கில் பயன்பாடு இன்றி முடங்கிக்கிடக்கின்றன. உதவியின் பெயரால் திரட்டப்படும் பெருவாரியான பணம் முறைகேடான வழிகளில் செலவழிக்கப்படும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மருத்துவச் சேவை செய்வதைப் பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்றிக்கொண்ட நிறுவனங்கள், தனிநபர்கள் பெருகிவிட்டதைக் காலம் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறது. இவ்வளவு கெட்டு அழிந்த சூழலுக்குள் அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என்று திருப்பித் தரும் மனது ஒரு மனிதருக்கு வருகிறது என்பது நம்பிக்கை தரும் செயல். இன்றைய மருத்துவச் செலவுகள், நோயை விடக் கொடிய வலியாக உருவெடுக்கின்றன. நோய்மை உருவாக்கிய பயத்தை விட, மருத்துவமனைகள் உருவாக்கிய பயம் அதிகமாகிறது.

நோயின்போதுதான் ஒவ்வொரு மனிதனும் தன் வயதை மறந்துபோகிறான். குழந்தையைப்போல யாரோ தன்னை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறான். அன்புக்காக ஏங்கத் துவங்குகிறான். வேறு எந்தச் சூழலை விடவும் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட பிறகு, கையில் காசு இல்லாமல் போவதுதான் மிக மோசமான துரதிர்ஷ்டம். மருந்துகள் நோயில் இருந்து மனிதனை விடுவிக்கக் கூடும். ஆனால், தொடர்ந்த அக்கறையும் அன்புமே நோயாளியைப் பூரண சொஸ்தமாக்குகிறது. இயல்புக்குத் திரும்பச் செய்கிறது.

வில்மா ருடால்ஃப் என்ற ஓட்டப் பந்தய வீராங்கனையைப்பற்றிய புத்தகம் ஒன்றினை வாசித்தேன். 1960-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸில் மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்ற அமெரிக்க வீராங்கனை. உலகின் மிக வேகமாக ஓடும் பெண் என்று புகழாரம் சூட்டப்பட்டவள்.

இந்த வெற்றியின் பின்னே ஒரு பெண்ணின் மன உறுதி மறைந்து இருக்கிறது. வில்மா சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு, கால்கள் சூம்பிப் போய் படுக்கையிலே கிடக்கிறாள். அவள் வயதுப் பிள்ளைகள் வீதியில் விளையாடும்போது அவளால் வீட்டுக்குள்கூட நடக்க முடியவில்லை. உதவிக்கு அம்மாவோ, சகோதரிகளோ இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. வலது கால் வளைந்து இருந்தது.

மருத்துவர்கள் அவளைத் தன் வாழ்நாள் முழுவதும் சூம்பிய கால்களுடன் மூலையில்தான் கிடக்கக் கூடும் என்று சொன்னார்கள். ஆனால், அதைவில்மாவின் தாய் நம்பவில்லை. தன் மகள் நடப்பாள், ஓடுவாள், ஏன் பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுவாள் என்று உறுதியாகச் சொன்னாள். அது பைத்தியக்காரத்தனமான நம்பிக்கை என்று மருத்துவர்கள் பரிகாசம் செய்தார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் வில்மாவுக்கு நடக்க உதவி செய்தாள். மற்ற சகோதரிகளும் துணை நின்றார்கள். 10 வயது வரை இந்த சிகிச்சை நாள் தவறாமல் நடைபெற்றது. வில்மா லேசாகக் காலை ஊன்றி நடக்க ஆரம்பித்தாள். தினமும் அவளை ஐந்து மைல் தூரம் நடக்கவைப்பது என்று அம்மா வைராக்கியமாக அவளை இழுத்துக்கொண்டு நடந்தாள். இரவில் கால் வீக்கம் கண்டுவிடும். வலியில் கண்ணீர் பெருகும். சகோதரிகள் அவள் வீங்கிய காலுக்கு ஒத்தடம் தருவார்கள். ஒவ்வொரு நாளும் சித்ரவதையாக இருக்கிறதே என்று வில்மா கண்ணீர்விடுவாள். ஆனால், அம்மா... அவளை நடக்கவும், ஓடவும் பழக்கினாள். வலி மறந்து போய் ஓட வேண்டும் என்ற வெறி மனதில் உண்டானது. 12 வயதில் தானாக ஓடத் துவங்கினாள். அக்காவுடன் பந்து விளையாடத் துவங்கினாள். அதன் பிறகு, கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. சில நாட்கள் அவள் மணிக்கணக்கில் ஓடினாள். வியர்வையும், களைப்பும், வலியும் ஒன்றுசேர்ந்து அவளை அமுக்கின. ஆனால், அவள் துவண்டுவிடவில்லை. 1956-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றாள். அடுத்த ஒலிம்பிக்கில் மூன்று தங்கப் பதக்கங்கள்.

வில்மாவின் வெற்றிக்கு யார் காரணம்? எங்கே இருந்து அவளது நம்பிக்கை உயிர் பெற்றது என்று நேர்காணலில் கேட்டபோது, தன்னால் நோயில் இருந்து விடபட முடியும் என்று அம்மா முழுமையாக நம்பினாள். அதற்குக் குடும்பமே தன்னை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டது. ஒருவேளை தான் புறக்கணிக்கப்பட்டு இருந்தால், கால்கள் முடங்கி வீட்டில் மூலையில்கிடந்து செத்துப் போயிருப்பேன் என்று அறிவித்தாள் வில்மா.

அந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க, எனக்கு வில்மாவை விடவும் அவளது தாய் மிக உன்னதமான வளாகத் தோன்றினாள். எவ்வளவு பெரிய போராட் டம். தன் மகள் பந்தயத்தில் ஓடி வென்றபோது அந்த தாயின் மனது எவ்வளவு உவகைகொண்டு இருக்கும். அந்த நிமிஷத்தில் அந்தத் தாயின் கண்களில் இருந்து பீறிட்ட கண்ணீரைப்போல உலகில் உயர்வானது வேறில்லை. நம்பிக்கை ஒரு விதை. அது மனதில் ஆழமாக ஊன்றிவிட்டால், அதில் இருந்து நிச்சயம் அதிசயங்கள் விளையத் துவங்கும்.

நம்பிக்கையை உருவாக்குவதும், வளர்த்து எடுப்பதும் எளிதானது இல்லை. அது நம் வேலை இல்லை என்றே பெரும்பாலும் நம்புகிறோம். அது உண்மை இல்லை. நம்பிக்கை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டிய ஆதாரப் பணி.

'Pay it Forward' என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த் தேன். மிகச் சிறப்பான படம் என்று வகைப்படுத்தமுடி யாது. ஆனால், அவசியம் பார்க்க வேண்டிய படம்.

டிரேவர் மெக்கன்சி என்ற 11 வயதுச் சிறுவன் அமெரிக்கப் பள்ளி ஒன்றில் படிக்கிறான். அவனது பள்ளியில் உலகை மாற்ற விரும்பும் ஐடியா ஒன்றினை ஒவ்வொரு மாணவனும் மாதிரித் திட்டமாக தயாரித்து வந்து, வகுப்பறையில் விளக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்கள்.

டிரேவர் ஒரு திட்டத்தை முன்மொழிகிறான். அந்தத் திட்டம் என்னவென்றால், நாம் முகம் அறியாத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். அந்த மூவர் தனக்குத் தெரிந்த மூன்று பேருக்கு உதவும்படியாகச் சொல்ல வேண்டும். அவர்கள் இதுபோல தொடர்ந்து செய்ய ஆரம் பித்தால், இரண்டு வாரங்களில் 47 லட்சத்து, 82

ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர். நாம் செய்ய வேண்டியது முன் அறிமுகம் இல்லாத மூன்று நபர்களுக்கு உதவ முன்வருவது மட்டுமே என்கிறான். இதை வகுப்பறையில் மாணவர்கள் கேலி செய்கிறார்கள். ஆனால், ஆசிரியர் இது அருமையான திட்டம் என்று பாராட்டுகிறார்.

டிரேவர் இந்தத் திட்டத்தைத் தானே நடை முறைபடுத்திப் பார்க்க முயற்சிக்கிறான். தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத போதை மருந்து அடிமை ஒருவனுக்கு உதவி செய்கிறான். வீட்டுக்கு அழைத்து வந்து உணவு தருகிறான். இந்த உதவும் கரங்களின் சங்கிலி உருவாக்கம் துவங்குகிறது. டிரே வரின் இந்த முயற்சியைப் புரிந்துகொள்ளாத அம்மா கோபப்படுகிறாள். அவன் வீட்டைவிட்டு வெளியே போகிறான். நண்பனுக்கு உதவி செய்யப் போய், போக்கிரிகளிடம் மாட்டிக்கொண்டு கத்திக் குத்து வாங்குகிறான்.

ஆனால், இந்த உதவும் சங்கிலியால் பலன் பெற்ற ஒரு பத்திரிகையாளன் எளிமையான இத்திட்டம் பற்றி எழுதத் துவங்குகிறான். திட்டம் வெற்றி பெற ஆரம்பிக்கிறது. உலகெங்கும் உதவும் சங்கிலி வளர்ந்துகொண்டே போகிறது.
ஓர் ஆள் தன்னால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்தால் போதும். உலகம் மாறிவிடும் என்கிறது இந்தப் படம். இது மறுக்க முடியாத உண்மை. இந்த உதவிக்கு எந்தக் கைம்மாறும் எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. உதவி என்பது செயலாகவோ, பணமாகவோ, கற்றுத்தருவதாகவோ, ஆறுதலாகவோ, அன்பாகவோ, ஒரு நல்ல செய்தியை, சிந்தனையை அடுத்தவருக்குச் சொல்வதாகவோ என எப்படியும் இருக்கலாம். ஆனால், அது விருட்சம் போலக் கிளைவிட்டுக்கொண்டே செல்ல வேண்டும். இந்த சங்கிலித் தொடர் உதவிகள் வழியாக எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார்கள்.

இந்தப் படம் உருவாக்கிய பாதிப்பில் இன்று நீண்டு சங்கிலித் தொடர் போல உதவும் முயற்சிகள் உருவாகி உள்ளன. முகம் தெரியாமல் மனிதர்கள் பொருளுதவி செய்கிறார்கள். உலகெங்கும் இந்த இயக்கம் வளர்ந்து வருகிறது.

இதற்கான முதற்பணி உங்களால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்யுங்கள். அறிந்த, சிறந்த விஷயங்களை மூன்று பேரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். கற்றுக்கொடுங்கள். உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். ஆலமரத்தின் நிழல் மட்டுமில்லை... புல்லின் நிழல்கூட ஏதோ ஒன்றுக்கு இளைப்பாறுதல் தருகிறது என்பதுதான் உண்மை!

Friday, October 30, 2009

vikatan மழலைகள் ஸ்பெஷல் !

மழலைகள் ஸ்பெஷல் !
சூப்பர் டிப்ஸ்....
உங்கள் செல்லக்குட்டி...இனி, வெல்லக்கட்டி!

'குழந்தை வளர்ப்பு, ஒரு கலை மட்டுமல்ல... அறிவியலும்கூட!' ((Parenting is not only an art, it is also a science)என்பதுண்டு! அதற்காக, 'அறிவியல்பூர்வமாக வளர்க்கிறேன் பேர்வழி' என்று எதற்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடுவது... நிபுணர்களிடம் போய் க்யூ கட்டி நிற்பது... என்று ஆட ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஆனால், குழந்தையை நாம் வளர்க்க வேண்டியது இல்லை என்பதுதான் உண்மை. இதற்காகவேதான் சமீபகாலங்களாக 'குழந்தைகளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள்!' என சத்தமாகக் கூற ஆரம்பித்துள்ளனர் உலகெங்கும் உள்ள குழந்தையியல் அறிஞர்கள். குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கான பயிற்சிகள்கூட வெளிநாடுகளில் நடைபெறுகின்றன. அதன் ரத்தினச் சுருக்கமாக நெய்யப்பட்டுள்ள, குழந்தை வளர்ப்புக்கான இந்த நூறு டிப்ஸ்கள், உங்கள் குழந்தைகளை 'குட் பாய்', 'குட் கேர்ள்' ஆக்கிவிடும்!

அப்புறமென்ன... நீங்கள்தான் 'பெஸ்ட் அம்மா - அப்பா'!

ஊட்டி வளர்க்காதீங்க!

1. ஒன்றரை வயதில் இருந்தே குழந்தைகளை அவர்களாகவே உண்ணப் பழக்குங்கள். இட்லி துண்டுகளிலிருந்து உருண்டை சாதம் வரை படிப்படியாகப் பழகட்டும். பிள்ளைகளின் உண்ணும் ஆர்வத்தை தூண்ட இதுவே முதல் படி.

2. குழந்தைகள் உங்களைப் போலவே 'சுத்தபத்தமாக' சாப்பிட வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. உணவு சிந்தும், உடலெல்லாம் அழுக்காகும், நேரம் எடுக்கும்... பரவாயில்லை. அதற்காகக் குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ தவறு. குழந்தைகள், உணவை வெறுக்க இதுவும் ஒரு காரணமாகிவிடும்.

3. குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் அளவு மிகவும் முக்கியம். எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு மட்டும் ஊட்டுங்கள். 'இன்னும் ஒரு வாய் சாப்பிட்டா நல்லதுதானே' என்று திணிப்பது, சரியான அணுகுமுறையல்ல.

4. 'கொஞ்சம் சோறு சாப்பிடும்மா... சாக்லெட் வாங்கித் தரேன்', ''கொஞ்சம் கீரை சாப்பிடும்மா... 'குர்குரே' வாங்கித் தரேன்'' என்று ஆசை காட்டி சாப்பிட வைப்பது, அம்மாக்கள் செய்யும் தவறு. அது, 'இந்த சோற்றையும் கீரையையும் கஷ்டப்பட்டு (!) சாப்பிட்டுட்டா... சாக்லெட், ஸ்நாக் இதெல்லாம் கிடைக்கும்!' என குழந்தைகளுக்கு உணவின் மீது இன்னும் சலிப்பையும், நொறுக்குத் தீனியின் மீது இன்னும் ஆசையையும் விதைக்கும்!

5. ''என் பிள்ளைக்கு இனிப்பே கொடுக்கமாட்டேன்... உப்பே சேர்க்க மாட்டேன்'' என்று கர்வப்படும் அம்மாக்களே, கவனம்! ஏனெனில், குழந்தைகளுக்கு இனிப்பு, உப்பு என எல்லா சுவையும், சத்தும் தேவைதான்! எனவே எந்தச் சுவையையும், அதன் மூலம் சத்தையும் அவர்களுடைய உணவிலிருந்து முற்றிலுமாக நீக்கும் தவறைச் செய்து விடாதீர்கள்! கூடவே, இனிப்பே சாப்பிடாத குழந்தைக்கு பின்னாளில் இனிப்பு அறிமுகமாகும்போது, வட்டியும் முதலுமாகச் சேர்த்து சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது!


6. 90:10 முறையை உணவில் கடைபிடியுங்கள். அதென்ன 90:10? சிம்பிள்... 90 சதவிகிதம் உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக இருக்கட்டும். இனிப்பு, ஸ்நாக்ஸ் என 10 சதவிகிதம் அவர்களின் சுவைக்காக இருக்கட்டும். தப்பில்லை.

7. எப்போதும் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பது தவறு. குழந்தைகள் உணவு உண்ண வேண்டிய நேரத்தில்தான் உண்ண வேண்டும். சதா கொறித்துக் கொண்டே இருந்தால் அவர்கள் சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவு சாப்பிட முடியாது.

8. உணவு விஷயத்தில் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு டைப் சாப்பாடு... குழந்தைகளுக்கு வேறு மாதிரி என்பது சரி வராது. அதாவது, நீங்கள் சிப்ஸ், குளிர்பானம் சாப்பிட்டால் குழந்தையும் அதையேதான் விரும்பும்.

9. 'ஜர்னல் பீடியாட்ரிக்' எனும் பத்திரிகையின் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, எனர்ஜி டிரிங்க்ஸ்... இதெல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. 100% பழச்சாறு என்று ஜிகினா வேலை காட்டும் விளம்பரங்களிலும் உண்மைஇல்லை. எனவே, நீங்களே பழங்கள் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுங்கள். அதுவே பெஸ்ட்!

10. ஒரே மாதிரி சாப்பாடு கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடாது. குறைந்தபட்சம் அதன் ஸ்டைலையாவது மாற்றுங்கள்; கொஞ்சம் ஷேப்பை மாற்றுங்கள். உதாரணமாக, குழந்தைக்கு எழுத்துக்கள் வடிவத்திலோ, படகு, பூ போன்ற வடிவங்களிலோ பூரி, சப்பாத்தி, தோசை ஆகியவற்றை சுட்டுக் கொடுங்கள். பிள்ளைகள் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.
தன்னம்பிக்கை ஊட்டுங்க!

11. உங்கள் அன்பை குழந்தைக்குத் தெரியப்படுத்துங்கள். ஆம்... 'அப்பா, அம்மாவுக்கு என் மேல அவ்ளோ அன்பு' என்று குழந்தை உணரும்படியான உங்களின் நிபந்தனையற்ற அன்பே அவர்கள் தன்னம்பிக்கைக்கான முதல் தேவை.

12. சமையலில் உதவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, படுக்கையை சரி செய்வது என வீட்டிலுள்ள சின்னச் சின்ன வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். இது, அவர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்க்கும்.

13. குழந்தைகள் எப்போதும் எதையாவது திறந்து, மூடி என்று நோண்டிக் கொண்டேதான் இருப்பார்கள். அதிலும் கிச்சன் கப்போர்டுகளும் கரண்டிகளும் அவர்களுடைய ஃபேவரிட். இதெல்லாம் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையைத் தானாகவே வளர்த்துக் கொள்ளும் வழிகள்தான். கரண்டியால் தட்டி சத்தம் எழுப்புவது... டம்ளர்களில் தண்ணீர் ஆற்றுவது... இப்படி 'எனக்கும் தெரியும்' என்று அவர்கள் செய்யும் இந்தச் சேட்டைகளை ஆங்கிலத்தில் 'பேபி புரூஃபிங்' (Baby proofing) என்பார்கள். எனவே, இதற்கெல்லாம் அவர்களை அனுமதியுங்கள். கூடவே, அங்கு ஆபத்தில்லாத சூழலை உருவாக்குங்கள்.

14. நல்ல வழிமுறைகள் காட்டுங்கள். எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் சில ஒழுங்குகளைப் புகுத்துங்கள். உதாரணமாக... வீட்டுப் பாடங்கள் செய்வது அல்லது விளையாட்டுகளில் சில விதிமுறைகள் தருவது. அவற்றை அவர்கள் கடைபிடிக்கப் பழக்குங்கள். சரியாகச் செய்யும்போது பாராட்டுங்கள்.

15. கோயிலுக்குச் செல்லும் நேரம், அவுட்டிங் செல்லும் இடங்கள் என சிலவற்றை குழந்தைகளைக் கலந்தாலோசியுங்கள். ''இதுக்கெல்லாம் எதுக்கு அதுககிட்ட கேட்டுகிட்டு..?'' என இழுக்காதீர்கள். முடிவெடுப்பது நீங்கள்தான். ஆனால், அவர்களிடம் கலந்துரையாடுவது, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும். தனது கருத்தும் கேட்கப்படுகிறது என்பது அவர்களைப் பொறுப்புள்ளவர்களாக்கும்.

16. நண்பர்கள், உறவினர்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து சுற்றுலா செல்லுங்கள். அந்தக் குடும்பங்களிலும் குழந்தைகள் இருந்தால் இன்னும் சிறப்பு. அருகிலுள்ள இடங்களுக்குச் செல்வதே போதுமானது. பிற குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல், உங்கள் குழந்தையின் வெளி உலகப் பழக்கத்தை வளர்க்கும்.

நீங்களும் குழந்தையாகுங்க!

17. குழந்தைகளுக்குச் செல்லப் பெயர் சூட்டுங்கள். அது 'கரடிக் குட்டி'யாகவும் இருக்கலாம், 'ராசா'வாகவும் இருக்கலாம். அந்தப் பெயர்கள், பெற்றோரின் மனதில் தனக்கு ஸ்பெஷல் இடம் உண்டு என குழந்தையை சிலிர்க்க வைக்கும்.

18. குழந்தைகளுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்களும் ஒன்றுதான்... தெருமுனை 'பார்க்'கும் ஒன்றுதான். அவர்கள் உற்சாகமாக விளையாடக்கூடிய ஓர் இடமாக இருந்தால் அவர்களுக்கு அது போதுமானது. எனவே, பெரிய பெரிய பிளான்களுடன் காத்திராமல், அடிக்கடி அவர்களை அருகிலுள்ள வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

19. தினமும் ஒரு மணி நேரமாவது பிள்ளைகளுடன் செலவிடுங்கள். பேசி, சிரித்து, விளையாடி அவர்களிடம் ஸ்கூல் கதைகளைக் கேட்டு மகிழுங்கள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இணைப்பை இது வலுவாக்கும்.

20. ஆன்மிகத்தில் நம்பிக்கை உண்டா? தினமும் குடும்பமாக கூடி பிரார்த்தனை செய்யுங்கள். குழந்தைகளுக்கு வழிகாட்டவும், குடும்பமாக நேரம் செலவிடவும் இது உதவும்.

21. குழந்தைகள் உங்களை எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் அழைக்கலாம் எனும் அனுமதி கொடுங்கள். அவர்களுடைய அவசரத் தேவைக்கோ, மனம் சோர்வாக இருந்தாலோ, திடீர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவோ அவர்கள் உங்களை அழைக்கட்டும். அலுவலகம், மீட்டிங் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். குழந்தைகளுக்கு நீங்கள் எப்போதும் கூப்பிட்டதும் பேசுபவராக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

பழக்கத்தை பயிரிடுங்க!

22. குழந்தைகளைச் சரியான நேரத்தில் தூங்கப் பழக்குங்கள். குழந்தைக்கு எப்போது தூக்கம் வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். கண்ணைக் கசக்கும், கொட்டாவி விடும், தோளில் தொங்கும், சோர்வாய் இருக்கும். உடனே குழந்தையைப் படுக்க வையுங்கள். இப்படி கொஞ்ச நாள் பழக்கினாலே, தூக்கம் வரும்போது தானாகப் போய் படுத்துக்கொள்ளும்! படுக்கையறையில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கட்டும். அது குழந்தையை நீங்கள் கவனிப்பதற்காக! குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு வெளிச்சம் வைக்காதீர்கள்.

23. குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்தை நீங்கள் மிகச் சின்ன வயதிலேயே நிறுத்திவிட முடியும். முயற்சிதான் தேவை. நன்றாகப் பழகி விட்டால் பின்னர் அதை நிறுத்துவது வெகு கடினம்.

24. சின்னதாக குழந்தை தவறினாலே பதறியடித்துத் தூக்காதீர்கள். அவர்கள் தானாக எழுந்து வரப் பழக்குங்கள். நீங்கள் அருகில் இருந்து ஊக்கப்படுத்தினாலே போதும். நீங்களே வியக்கும்படி அவர்கள் வளர்வார்கள்.

25. ''கரீஷ்மாவை விட நீதான் சூப்பர்'' என்றெல்லாம் பிதற்றாதீர்கள். குழந்தைகளுக்கு வரக்கூடாத ஒரு பழக்கம், பிறரைக் குறை சொல்லுதல். அதேபோல ''தமிழ்ச்செல்வி எவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடறா... நீயும் இருக்கியே'' என பிற பிள்ளைகளைப் பாராட்டி, உங்கள் குழந்தையைத் தாழ்த்தாதீர்கள். அது, உங்களை அறியாமலேயே அவர்களின் மனதைச் சிதைப்பதற்கு காரணமாகிவிடும்.

26. பிறருக்கு உதவுதல், பிறரை மதித்தல் என்று குழந்தைகளுக்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுங்கள். கூடவே, நீங்களும் அதுபோல் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்காரரைத் திட்டினால் உங்கள் குழந்தையும் அப்படியே திட்டும். அதைத் தவிர்த்து, அவர்களுடைய குணாதிசயங்களை நல்ல முறையில் கட்டி எழுப்புங்கள்.

தட்டிக் கொடுங்க!

27. ''இது என் மகள்'' என அறிமுகப்படுத்துவதை விட, ''இது என் மகள் வேத வர்ணா'' எனப் பெயருடன் அறிமுகப்படுத்துங்கள். இது குழந்தைகளுக்கு ரொம்பவே உற்சாகம் ஊட்டும். அவர்கள் முக்கிய மானவர்கள் எனும் எண்ணத்தைத் தரும்.

28. குழந்தையை ஏதாவது சில எக்ஸ்ட்ரா பழக்கங்களில் ஈடுபடுத்துங்கள்... நடனம், இசை, நீச்சல் என குழந்தையின் விருப்பத்துக்குத் தக்கபடி. கூடவே, நீங்களும் அந்த வகுப்புகளுக்குச் சென்று மற்ற குழந்தைகளின் அன்னையருடன் உரையாடுங்கள். நீங்கள் நம்பவே முடியாத அளவுக்கு அனுபவங்கள் இதில் கிடைக்கும்... இருவருக்கும்.

29. ஏதேனும் நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களைப் பேச உற்சாகப்படுத்துங்கள். குழந்தைகளிடம் கேள்வி கேட்டால் முந்திக்கொண்டு நீங்கள் பதில் தராதீர்கள். குழந்தைகள், அவர்களைப் பற்றி அவர்களே பேசிப் பழகட்டும்.

30. ''உனக்குத் தெரியாது, நீ எப்பவுமே தப்பு தப்பாதான் பண்ணுவே, உன்கிட்ட குடுத்தா உருப்பட்ட மாதிரிதான்''

- இதெல்லாம் அம்மாக்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள். இப்படி எதேச்சையாக, ஜஸ்ட் லைக் தட் நீங்கள் சொல்லிப் போகும் வார்த்தைகள், குழந்தைகளின் தன்னம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடும்... ஜாக்கிரதை!

31. குழந்தைகளாலும் சில விஷயங்களைச் செய்ய முடியும் என நம்புங்கள். அவர்கள் மேல் நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள்.

32. டிரெஸ்ஸிங்கில் இருந்து டிராயிங் வரை அவர்களுடைய 'ஐடியாக்கள்' சுமாராக இருந்தாலும் அவற்றை முடிந்த வரை மதித்துச் செயல்படுத்துங்கள். புதுப் புது ஐடியாக்களுடன் அவர்கள் களமிறங்க இது ரொம்பவே தூண்டுதலாக இருக்கும்.

33. குழந்தையுடன் ரொம்பவே ஸ்பெஷலாக கொஞ்ச நேரம் செலவிடுங்கள். வேறு எந்த தொந்தரவுகளும் இல்லாமல் நேருக்கு நேர் பார்த்துப் பேசுங்கள். குழந்தையை நீங்கள் ஸ்பெஷலாகக் கவனிப்பதே அவர்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.

34. குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்யும்போது முடிந்தால் அருகில் இருங்கள். இல்லையேல் தினமும் அவர்களுடைய வீட்டுப் பாடத்தை சரி பார்த்துப் பாராட்டுங்கள். அவர்களை அது உற்சாகப்படுத்தும்.

கண்டிக்கவும் மறந்துடாதீங்க!

35. குழந்தைகளைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது மிக முக்கியம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் சிறு வயதிலேயே செய்யுங்கள். குழந்தைகளைப் பெற்றோர் கண்டித்து, தண்டித்து வளர்ப்பதில் தவறில்லை. ஆனால், எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை மனதில் கொண்டு தண்டிக்க வேண்டும். ஆனால், அது சின்ன வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். வளரும் வரை செல்லம் கொடுத்துவிட்டு, வளர்ந்தபின் தண்டிக்காதீர்கள். அது அவர்களை ரொம்பவே பாதிக்கும்.

36. குழந்தையை அப்பா கண்டிக்கும்போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்துகொள்ள வேண்டும். தப்பு செய்தால் இரண்டு பேருமே கண்டிப்பார்கள், தண்டிப்பார்கள் எனும் நிலை வேண்டும். அதேபோல நல்லது செய்தால் இருவரும் பாராட்ட வேண்டும். அதுதான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும்.

37. ஒரேயடியாகச் செல்லம், ஒரேயடியாகத் தண்டனை என இரண்டு எல்லைகளில் நிற்காதீர்கள். ஒரு பேலன்ஸ் இருக்கட்டும். முதல் முறை தவறு செய்யும்போதே தண்டிக்காதீர்கள். செய்தது தவறு என புரிய வையுங்கள். சில எச்சரிக்கைகள் செய்யுங்கள். இவை எல்லாம் மீறப்படும்போது தண்டியுங்கள்.

38. 'மம்மி அடிக்க மாட்டாங்க, சும்மா மிரட்டிட்டேதான் இருப்பாங்க' என குழந்தை நினைக்கக் கூடாது. தவறு செய்யும்போது அந்த நேரத்திலேயே கண்டித்து, தண்டிப்பது நல்லது... அப்பா வரும் வரை காத்திருந்து தண்டிப்பதை விட.

39. மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பழக்கத்தை... செல்லமாகவோ, கண்டிப்புடனோ குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு வழங்குவது நல்ல பண்பு என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் கையால் வறியவருக்கு உதவிகள் செய்ய வைக்கலாம். அதற்கு முதல் கட்டமாக, கொடுக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்வது முக்கியம்.

40. குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து, எதையாவது எடுத்துக் கொண்டு வருவது சகஜம். உண்மை யில் குழந்தைகளுக்கு 'இது தன்னுடையதல்ல, எடுக்கக் கூடாது' என்பதல்லாம் தெரியாது. அந்த அறிவை ஊட்ட வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தையின் தன்மையை உணர்ந்து தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். தொடர்ந்தால், கண்டிக்க வேண்டும்.

41. காலம் தவறாமையை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். குறிப்பாக, நீங்களும் அதைக் கடைபிடியுங்கள். அரக்கப்பரக்க குழந்தையை ஸ்கூலுக்கு இழுத்து கொண்டு ஓடுவது... அப்படியும் பத்து நிமிடம் லேட்டாக கொண்டு விடுவது போன்ற பழக்கங்களை விட்டொழியுங்கள். குழந்தைக்கும் இதையெல்லாம் ஸ்ட்ரிக்டாகப் பழக்குங்கள்.

விருப்பத்தை வெறுக்காதீங்க!

42. குழந்தைகளிடம் ஏதேனும் கலை ஆர்வம் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அந்த ஏரியாவில் குழந்தைக்கு வாய்ப்பு களை அதிகமாக உருவாக்கிக் கொடுங்கள். மேஸ்ட்ரோ இளைய ராஜாவோ, ஓவியர் எம்.எஃப். ஹ§சைனோ உங்கள் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கலாம் எனும் எண்ணம் கொண்டிருங்கள்.

43. இசை, குழந்தைகளின் கவனத்தையும், மனதையும் கூராக்கும். இசை உங்கள் குழந்தைக்குப் பிடிக்குமெனில் வீட்டில் அடிக்கடி இசை கேட்க வையுங்கள். குழந்தைகளின் இசை ஆர்வம் அதிகரித்தால் அவர்களுடைய கணித அறிவும் வளரும். ஆச்சர்யமாக இருக்கிறதா? இரண்டையுமே நிர்ணயிப்பது மனிதனின் வலது மூளைதான்!

44. அவரவருக்குப் பிடித்தால்தான் அதன் பெயர் 'ஹாபி'. எனவே, செஸ், ஷட்டில் என்று உங்களின் விருப்பத்தையே குழந்தைகளின் விருப்பமாகத் திணிக்காமல், அவர்களின் விருப்பமான 'ஹாபி'யை தெரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட வகுப்புகளில் சேர்த்து விடுங்கள். அதற்காக காலை, மாலை, சனி, ஞாயிறு என்று வாரத்தில் அவர்களை நான்கு 'எக்ஸ்ட்ரா ஆக்கிவிட்டி' வகுப்புகளில் சேர்க்காமல், ஏதாவது ஒன்றில் சேர்த்து, அதில் அவர்களை முழுமையாக்குங்கள்.

பாதுகாக்க மறந்துடாதீங்க!

45. எக்காரணம் கொண்டும் உங்களுடைய அலுவல் டென்ஷனையோ, பிறர் மேல் உள்ள கோபத்தையோ குழந்தைகளிடம் காட்டவே காட்டாதீர்கள். நீங்கள் அவசரத்திலோ, கோபத்திலோ சொல்லும் ஒற்றை வார்த்தை போதும்... குழந்தையின் மனதைப் புரட்டிப் போட. குழந்தைகளுடன் பேசும்போது உலகிலுள்ள மற்ற அனைத்து பிரச்னைகளையும் தூர எறிந்துவிட்டுப் பேசுங்கள்.

46. பெற்றோர், குழந்தைகளுக்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும். இல்லையேல் குழந்தைகள் எதையாவது செய்து பெற்றோரின் கவனத்தைப் பெற முயல்வார்கள். அதிக குறும்பு செய்வது, எதையாவது உடைப்பது... இப்படி. குழந்தை விழுந்து அழுதால்தான் நீங்கள் ஓடிப் போய் எடுப்பீர்களெனில், குழந்தை அடிக்கடி தானாகவே போய் விழுந்து அழும் என்பது உளவியல் உண்மை.

47. சரியான கவனம் பெற்றோரிடமிருந்து கிடைக்காத பிள்ளைகள் பள்ளிக்கூடங்களிலும் நன்னடத்தையுடன் இருப்பதில்லை. அடுத்தவர்களைக் கிண்டல் செய்தோ, தாழ்வாகப் பேசியோ கவனம் ஈர்ப்பார்கள். தங்கள் மனக் குறையை வேறு செயல்களால் நிரப்ப முயலும் உத்தியே இது. எனவே, குழந்தைகளின் அடிப்படைத் தேவையை அறிந்து கொள்ளுங்கள்.

48. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை எங்கும் பரவியிருக்கின்றன. எனவே, குழந்தைகளைக் கவனமாகக் கண்காணியுங்கள். குழந்தைகளிடம் அன்றைய நிகழ்ச்சிகளை முழுவதும் கேளுங்கள். அவர்களின் நடவடிக்கை, முகபாவம் இவற்றில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் உஷாராகிவிடுங்கள்.

49. 'குட் டச்', 'பேட் டச்'... இரண்டையும் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கலாம். ''யாராவது 'பேட் டச்' பண்ணினா மம்மிகிட்ட சொல்லணும்'' என அறிவுறுத்தி வைக்கலாம். குழந்தையை யாரும் தொந்தரவு செய்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து களைய இது உதவும்.

50. பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாகவே வரும்! இன்னொரு முக்கியமான விஷயம், பாலியல் தொந்தரவுகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல... ஆண் குழந்தைகளுக்கும்தான்!

சொல்லிக் கொடுங்க!

51. குழந்தைகள் தினமும் செய்தித்தாளைப் படிக்க ஊக்கப்படுத்துங்கள். நாளிதழ்களிலுள்ள செய்திகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தலைப்புச் செய்திகளை விவாதியுங்கள். அவை குழந்தைகளின் பொது அறிவுத் திறனை வளர்க்கும். உதாரணமாக... நாட்டுத் தலைவர்கள், இடங்கள் போன்றவற்றைப் பற்றி அதிகம் பேசலாம்.

52. புதிய புதிய நூல்களை வாசிக்க உற்சாகப்படுத்துங்கள். அவர்களை ஏதேனும் நூலகங்களில் இணைத்து விடுங்கள். வீட்டிலேயே அவர்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள் கிடைக்க வழி செய்யுங்கள். இவையெல்லாம் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்கும்.

53. பிள்ளைகள் எதிலும் கவனம் இல்லாமல் இருப்பது பெரும்பாலான பெற்றோரின் கவலை. குழந்தைகளுக்குக் கவனம் ஊட்டுவது ஒரு கலை. அவர்களுக்குச் சில பயிற்சிகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் கவனத் திறனை ஊக்குவிக்கலாம். பத்து நிமிடத்தில் பொம்மைகளை அடுக்கி முடிப்பது, பத்து நிமிடத்தில் பத்து கற்களைப் பொறுக்கி வருவது, பொருட்களை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்து காகிதத்தில் அதன் பெயர்கள் எழுதுவது... இப்படி உங்கள் கற்பனைக்கு ஏற்ப ஏதாவது!

54. பெரிய வேலையை சிறிது சிறிதாகப் பிரிக்கும் கலையை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக, வீட்டுப் பாடம் என்பது பெரிய வேலையென்றால் அதை சிறிது சிறிதாகப் பிரியுங்கள். 'இப்போது சயின்ஸ்... சாப்பிட்டதுக்கு அப்பறம் மேத்ஸ்...' - இப்படி உங்களுக்கு வசதிப்படும் வகையில் பிரிக்கலாம். முக்கியமான ஒரு விஷயம், குழந்தைக்கு அடிக்கடி 'பிரேக்' கொடுங்கள். தொடர்ந்து மணிக் கணக்கில் குழந்தை படித்துக் கொண்டே இருக்கக் கூடாது!

55. குழந்தைகளுக்கு எதிர்கால விருப்பம் என்ன என்பதைக் கேளுங்கள். அவற்றை ஒரு படமாக வரையச் சொல்லலாம். அப்படிச் செய்வதன் மூலம் குழந்தையின் அறிவுத் திறன் கூர்மையாகும். அவர்களுடைய கற்பனை சக்தியும் அதிகரிக்கும்.

56. குழந்தைகளுக்கான 'பஸில்' விளையாட்டுகள் இப்போதெல்லாம் கடைகளில் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன... எண்களை வரிசைப்படுத்துவது, வார்த்தைகளை வரிசைப்படுத்துவது, எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகள் அமைப்பது இப்படி நிறைய. அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.

57. பொருட்களை ஒரு கதை போல நினைவில் வைப்பது குழந்தைகளுக்கு மிகவும் எளிய செயல். எனவே, நினைவில் வைக்க வேண்டியவற்றை ஒரு கதை வடிவில் அவர்களிடம் சொல்லுங்கள். உதாரணமாக, பத்து விலங்குகளின் பெயர்களை நினைவில் வைத்திருக்க, அவற்றைக் கொண்டு ஒரு கதை உருவாக்குங்கள்.

அட்டென்ஷன் டு ஆரோக்கியம்!

58. குழந்தைகளுக்கு விளையாட்டில் அதிக ஆர்வத்தை உருவாக்குங்கள். ஓடி ஆடி விளையாடும்போது அவர்களுடைய உடல் ஆரோக்கியமடைகிறது. சிறு வயதிலேயே உருவாக்கும் விளையாட்டு ஆர்வம் அவர்களுடைய நீண்ட கால ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.

59. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதற்கு குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உண்ணப் பழக்குங்கள். விரைவிலேயே அந்தச் சுவை அவர்களுக்குப் பிடித்தமானதாகும். அல்லது காய்கறிகள் உண்ணும் பழக்கம் உருவாகும். இது அவர்களுடைய ஆரோக்கியத்தின் அஸ்திவாரம்.

60. குழந்தைகளுக்கு சிப்ஸ், பீட்ஸா, குளிர்பானங்கள் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே கொடுங்கள். தேவையற்ற கொழுப்புகள் அதிகம் உடலில் சேர இவை காரணமாகிவிடும். அதனால் இவற்றை அறவே தவிர்க்க முடிந்தால் அதுவே சிறப்பானது.

61. குழந்தைகளைப் பிற குழந்தைகளுடன் பழகவும், உற்சாகமாக விளையாடவும் அனுமதியுங்கள். ஆனால், 'விளையாடட்டும்' என்று ஓரமாக அமர்ந்து புத்தகம் படிக்காதீர்கள். எப்போதும் உங்கள் கவனம் குழந்தையின் மீதே இருக்கட்டும்!

அறையும் அக்கறையும்!

62. குழந்தைகளை வசீகரிக்கும் சூழல் வீட்டில் இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் படிக்கும் அறையில் மெலிதான நிறத்தில் பெயின்ட், நல்ல வெளிச்சம், காற்றோட்டம், தூய்மை எல்லாம் இருக்க வேண்டும். சுவர்களில் விலங்குகள், பறவைகள், கார்ட்டூன் என படங்கள் இருக்கலாம். படிக்கும் அறையில் குழந்தைகளை உற்சாகமாக பிடித்து வைக்க இவைஎல்லாம் உதவும்.

63. குழந்தைகளின் படுக்கை அறையில் ஒரு கான்சப்ட் பெயின்ட்டிங் செய்யுங்கள். உதாரணமாக, கடல் என்பது உங்கள் ஐடியா எனில், சுவர்களுக்கு நீல நிறம் கொடுத்து, மீன்கள், கடற்குதிரைகள், டால்பின்கள் என வரைந்து குழந்தைகளை குஷிப்படுத்தலாம்.

64. சிற்சில இடங்கள், அறைகள், இருட்டு இதையெல்லாம் கண்டு குழந்தைகள் பயப்படும். சில வேளைகளில் மிரண்டு போகும். அப்போதெல்லாம் கிண்டலடிப்பதோ, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதோ கூடாது. அவர்களிடம் அமர்ந்து, ''அங்க ஒண்ணும் இல்லடா'' என்று பயத்தை போக்குங்கள்.

பாகுபாடு வேண்டாமே!

65. குழந்தைகளிடையே சண்டை சச்சரவு வருவது வெகு இயல்பு. அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்பதில் கவனமாக இருங்கள். குழந்தைகள் எப்படி பிரச்னையைச் சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டுங்கள். குறிப்பாக, சில குழந்தைகள் கத்திப் பேசும், அழும், அடிக்கும். அவையெல்லாம் தவறு என்பதையும், பிரச்னை வந்தால் எப்படி அணுகவேண்டும் என்பதையும் பொறுமையாகச் சொல்லிக் கொடுங்கள்.

66. உங்கள் இரண்டு குழந்தைகள் சண்டை போட்டுக் கொண்டு நியாயம் கேட்க உங்களிடம் வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் இரண்டு குழந்தைகளும் சொல்வதை முழுமையாகக் கேட்க வேண்டும். நீங்கள் எது சரி என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். எது சரியான முடிவு என்பதைப் புரிந்த பின் அதை அழுத்தமாகச் சொல்லிவிடுங்கள்.

67. குழந்தைகளுக்குள்ளே பகிர்தலை ஊக்கப்படுத்துங்கள். பகிர்ந்து கொடுப்பது பெருமைக்குரியது, பாராட்டுக்குரியது எனும் எண்ணத்தை உருவாக்குங்கள். இது குழந்தைகள் பிரச்னைகளைத் தங்களுக்குள்ளேயே தீர்க்கும் வழியை உருவாக்கும்.

68. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ''மூத்தவ இந்த வயசுல நல்லா பேசிட்டாளே... இவளுக்கு ஏன் இன்னும் பேச்சு வரல?'' என ஒப்பிட்டுப் பார்த்துக் குழம்பாதீர்கள்.

69. இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரே மாதிரி பெயர் வைப்பது, ஒரே மாதிரி உடை உடுத்தி அழகு பார்ப்பது பெற்றோரின் விருப்பம். அதைக் குழந்தைப் பருவத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தைகள் தனித் தனி அடையாளங்களோடு, தனித் தனிக் குணாதிசயங்களோடு அவர்கள் போக்கில் வளரட்டும். ஒருவரை முழுமையாக சார்ந்து வாழ்வது பிற்காலத்தில் அவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை உருவாக்கும். எனவே, இரட்டைக் குழந்தைகளை இரண்டு தனித் தனிக் குழந்தைகளைப் போல பாவித்து வளருங்கள்.

70. இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் உங்கள் கவனத்தை ஒட்டுமொத்தமாக முதல் குழந்தையிடமிருந்து விலக்கி விடாதீர்கள். இது பெரும்பாலான பெற்றோர் செய்யும் மாபெரும் தவறு. இதனால் முதல் குழந்தையின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும். இரண்டாவது குழந்தையை மூத்த குழந்தை வெறுக்கவும் இது காரணமாகிவிடும். எப்போதும் முதல் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாவது குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பையும் அதனிடமே கொடுங்கள்.

71. மூன்றாவது குழந்தை பிறந்தால் சிக்கல் இன்னும் அதிகம். முதல் குழந்தை எப்போதும் ஸ்பெஷல். கடைக்குட்டிக்கு கவனம் நிச்சயம் தேவை. இரண்டாவது குழந்தை கவனிக்கப்படாமல் போகும் ஆபத்து உண்டு. இதை 'மிடில் சைல்ட் சிண்ட்ரோம்' என்பார்கள். 'பெற்றோர் நம்மிடம் பாகுபாடு காட்டாதவர்கள்' எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு எப்போதுமே மிகவும் அவசியம்.

72. இன்னொரு குழந்தை பிறந்தவுடன் மூத்த குழந்தையின் நடவடிக்கைகளில் வேறுபாடு தெரியும். குறிப்பாக, அதிக குறும்பு, சண்டித்தனம் இவை எல்லாம் வெளித் தெரியும். அதற்குக் காரணம் வலுக்கட்டாயமாகப் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதே என்பதைப் புரிந்து பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். இளைய குழந்தையைக் கவனிக்கும்போது மூத்த குழந்தையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

73. 'போகப் போக சரியாயிடும்' என இந்தப் பிரச்னையை விட்டு விடாதீர்கள். குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கை குறைவு, சோர்வு, கவலை என பல்வேறு விஷயங்களை இது உருவாக்கிவிடும். மன அளவில் சோர்ந்தால் உடல் நோய்களும் அவர்களுக்கு வர வாய்ப்பாகி விடும்.

நீங்கள் டாக்டர் அல்ல!

74. ''குழந்தைக்குக் காய்ச்சல்... ஏதாச்சும் மருந்து கொடுங்க'' என்று தெருமுனையில் இருக்கும் மருந்து கடைகளில் போய் நிற்காதீர்கள். குழந்தைகளுக்கான மருத்துவம் ரொம்பவே சிக்கலானது. குழந்தைகளின் நோய்கள், அதன் தன்மை, காரணம் எல்லாம் அறிய டாக்டரைப் பார்ப்பது மிக மிக முக்கியம். கிடைக்கும் டாக்டரிடம் போகாமல், குழந்தைகள் நல டாக்டரை மட்டுமே அணுகுங்கள். ரெகுலாக அதே டாக்டரிடம் செல்லும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

75. குழந்தையை மருந்துவரிடம் அழைத்துச் செல்லும்போது 'மெடிக்கல் ஹிஸ்டரி' ரொம்ப முக்கியம். பழைய மருந்து சீட்டுகள், தடுப்பூசி தகவல்கள் போன்ற அனைத்தையும் மறக்காமல் கொண்டு செல்லுங்கள்.

76. மருந்து கொடுப்பது குறித்து சந்தேகம் இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் டாக்டரிடம் கேளுங்கள். 'நிறைய பேர் காத்திருக்கிறார்களே' என அவசரப்பட்டு வெளியே வந்து குழம்பாதீர்கள். 'எந்தெந்த மருந்து எந்தெந்த நோய்க்கு, அதை எப்போதெல்லாம், எவ்வளவு கொடுக்கவேண்டும்?' என்பதன் பதில் தெளிவாக தெரிய வேண்டும்.

77. மருந்து வாங்கும்போது அது குழந்தைகளுக்கானது என்பதைக் குறிக்க 'for pediatric use' என எழுதப்பட்டிருக்கிறதா என பாருங்கள். இல்லையேல் கடைக்காரரிடம் கேளுங்கள். அப்படிக் குறிப்பிடப்படாத மருந்தைக் கொடுக்கும் முன் நிச்சயம் டாக்டரைக் கலந்தாலோசியுங்கள்.

78. மருத்துவர் சொன்னதற்கும் கடைக்காரர் தருவதற்கும் வித்தியாசம் உண்டா என பாருங்கள். 'இந்த மருந்து இந்த நோய்க்குரியதுதானா' என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

79. மருந்துகளின் அளவுகளில் கவனம் செலுத்துங்கள். 100 எம்.ஜி., 200 எம்.ஜி. என எந்த அளவை டாக்டர் சொல்கிறாரோ அதை வாங்குங்கள். இந்தக் கணக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது.

80. மருந்தில் மிக முக்கியமானது 'எக்ஸ்பயரி டேட்'. காலாவதியான மருந்துகள் விஷத்துக்குச் சமம். எந்த மருந்து வாங்கினாலும், அதன் எக்ஸ்பயரி டேட் பார்க்க மறக்காதீர்கள். பாட்டில் மருந்து வாங்குகிறீர்களெனில் பாட்டிலிலும், வெளிப்புறக் கவரிலும் போடப்பட்டிருக்கும் எக்ஸ்பயரி டேட் ஒரே மாதிரி இருக்கிறதா என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

81. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது ஜூஸ், கூல்டிரிங்ஸ் போன்றவற்றுடன் கலந்து கொடுக்காதீர்கள். தூய்மையான தண்ணீருடன் மட்டுமே கொடுங்கள்.

82. பெரியவர்களுக்குரிய மருந்துகளுக்கும், குழந்தைகளுக்கான மருந்துகளுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத விகிதாச்சார வித்தியாசம் உண்டு. பெரியவர்களுக்கான மருந்தைக் 'கொஞ்சமாக' கொடுத்தால் குழந்தைகளின் நோய் குணமாகும் என சிலர் நம்புவார்கள். அது மிகத் தவறு. குழந்தையின் உயிருக்கே அது ஆபத்தாக முடியும்.

83. குழந்தைக்கு ஒரு நாள் எத்தனை தடவை மருந்து தர வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்யட்டும். 'குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது... அதனால் இன்னும் இரண்டு தடவை எக்ஸ்ட்ராவாக கொடுப்போம்' என நீங்களே மருத்துவர் ஆக வேண்டாம்.

84. மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத, அவர்கள் எடுக்க முடியாத இடத்தில் வைக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் பெரியவர்களுடைய மருந்தை சாப்பிட்டுவிட்டால் சிக்கலாகிவிடும்.

85. குழந்தையின் தோல் மிகவும் மிருதுவானது. அதை சரிவரக் கவனிக்க வேண்டும். உங்களுக்குரிய கிரீம்களை குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். குழந்தை ஆயில், கிரீம் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

86. குழந்தைகளுக்கான கிரீம்களை அடிக்கடி மாற்றாதீர்கள். இவை குழந்தையின் உடலைக் காயப்படுத்திவிடும். தோலுக்கு மிகவும் தீங்கானது இது.

87. குளிர்காலம், வெயில் காலம் என காலத்துக்குத் தேவையான கிரீம்களைப் பயன்படுத்துவது சிறப்பானது.

88. 'குழந்தையின் காலில் முள் குத்துமே... கல் குத்துமே' என கவலைப்படாதீர்கள். இரண்டு வயது வரை குழந்தைகள் செருப்பு இல்லாமலேயே நடப்பதுதான் ஆரோக்கிய மானது. குழந்தையின் பாதங்கள் வலுவடைய இது முக்கியம்.

தாய்ப்பாலுக்கு தடா போடாதீங்க!

89. தாய்ப்பால் ஊட்டுவதன் அருமை பெருமைகளை பல முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். மீண்டும் ஒரு முறை கேட்பதில் தவறில்லை. தாய்ப்பால் குழந்தைக்கு தாயால் மட்டுமே தர முடிந்த வரம். எனவே, தவறாமல் கொடுங்கள். இது குழந்தைக்கு அலர்ஜி நோய் வராமல் தடுக்கும். நீண்ட நாட்கள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு வெகுவாகக் குறையும்.

90. ஒரு வயது வரை நன்றாகத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்புகளும் குறையும்.

91. உலகிலுள்ள எந்த பால் பவுடரை விடவும் உயர்வானது தாய்ப்பால்! ஒரு விஷயம் தெரியுமா? தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஏதேனும் நிறுவனம் விளம்பரம் செய்தால் ஜெயில்தான்... இங்கல்ல, ஸ்காட்லாந்தில்!

92. தாய்ப்பால், வலி நிவாரணியாகவும் செயல்படும். குழந்தைகளுக்கு வலிகளைத் தாங்கும் வலிமை தருவதில் தாய்ப்பால் பெரும் பணியைச் செய்கிறது. மிக மிக எளிதாக ஜீரணமாகக் கூடிய ஒரு உணவும் தாய்ப்பால்தான்.

93. குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவே நிறுத்தாதீர்கள். நீங்கள் முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

94. எதிர்பாராத விதமாக குழந்தைகள் மரணமடைவதை ஆங்கிலத்தில் SIDS(Sudden Infant Death Syndrome )என்கிறார்கள். இத்தகைய சிக்கல்களிலிருந்து குழந்தையைக் காப்பாற்றும் வலிமை தாய்ப்பாலுக்கு உண்டு.

95. படைப்பு அற்புதமானது. பிறந்த உடனே குழந்தைக்கு பதினைந்து இஞ்ச் தூரம்தான் பார்க்க முடியுமாம். அது தாயின் மார்பு மற்றும் முகத்துக்கு இடைப்பட்ட தூரம். குழந்தை தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே பால் குடிக்க இயற்கை தந்த வரம் இது எனலாம் ! இது தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பை வலுவாக்கும்.

பொம்மைகள் உஷார்!

96. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும் முன் நன்றாக யோசியுங்கள். குழந்தையின் அறிவையும் வளர்ப்பது போன்ற பொருட்களை வாங்குங்கள். சிறு குழந்தைகளுக்கு விலங்குகளின் பொம்மைகள் வாங்கினால், அவை அதன் பெயர்களைக் கற்றுக் கொள்ளும். அதை வைத்து ஒரு மிருககாட்சி சாலை வைத்து விளையாடும். நீங்கள் அதன் மூலம் குழந்தைக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம்.

97. ஐந்து வயதுக் குழந்தைக்கான விளையாட்டுப் பொருளை இரண்டு வயதான குழந்தைக்குக் கொடுக்காதீர்கள். வயதுக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்களில் பாதுகாப்பு சங்கதிகள் இருக்கும். உதாரணமாக, சிறு குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் பாகங்கள் பெரிது பெரிதாக இருக்கும். வாயிலோ மூக்கிலோ எதையும் குழந்தை நுழைக்க முடியாது.

98. காந்தப் பொருட்களுடன் கூடிய விளையாட்டுகளைத் தவிர்ப்பது உத்தமம். அது குழந்தையின் வயிற்றில் சென்று விட்டால் உயிருக்கே ஆபத்து. காந்தத்துடன் இணைந்த எழுத்துக்களை வாங்கி சிலர் ஃப்ரிட்ஜில் ஒட்டி வைப்பதுண்டு. சில நாட்களிலேயே அந்த காந்தம் அந்த எழுத்துக்களிலிருந்து கழன்று விழுந்து விடும். அதைக் குழந்தை தெரியாமல் விழுங்கிவிட வாய்ப்பு உண்டு.

99. 'பரிசாக வந்துவிட்டதே' என்பதற்காக பாதுகாப்பற்ற விளையாட்டு பொருட்களை குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள். பரிசு என்பது உங்கள் மீதான அன்பை இன்னொருவர் காட்டுவது மட்டுமே. அது பரிசளிப்பவரின் வசதி சம்பந்தப் பட்டதும்கூட! குழந்தையின் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்த வேண்டியது நீங்கள்தான்.

100. பென்சில், கிரையான்ஸ் போன்றவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். விலையைப் பார்க்காமல் நச்சுத் தன்மையற்ற பொருட்களாக பார்த்து வாங்குங்கள். ஆபத்தான பொருட்களை வாங்கிக் கொடுப்பதைவிட வாங்காமல் இருப்பது மிகவும் நல்லது.

ஈன்ற பொழுதினும்
நீங்கள் பலமுறை பெரிதுவக்க வாழ்த்துக்கள்!